Skip to content
ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

27 நட்சத்திரங்களில் திரு என்ற மரியாதையுடன் குறிக்கப்படுவது இரண்டே இரண்டு நக்ஷத்திரங்கள்தான். ஒன்று திருவோணம், மற்றொன்று திருவாதிரை (ஆதிரை).

திருவாதிரைத் திருநாளின் மற்றொரு பெயர் ஆருத்ரா. ஆருத்ரா என்றால் நனைதல் என்று பொருள். இறைவனின் அருள்மழையில், கருணையில் நனையும் நாள் மார்கழி மாதம்.

சேந்தன் என்ற விறகு வெட்டி ஓர் அதிதிக்காவது அன்னமிட்டு பின்னரே தானும் தன் மனைவியும் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஒருநாள் வருமானமில்லாததால் பட்டினி கிடக்க நேர்ந்தது. அப்போது சிவபெருமானே அதிதியாக வந்து ‘பசி’ என்றார். சேந்தனார் அவரை வரவேற்று உட்கார வைத்து மனைவியிடம் ‘‘ வந்தவர் பசி தீர்க்க என்ன செய்யலாம்’’என்று கேட்டார். அந்த அம்மையார் ‘‘கொஞ்சம் அரிசி மாவும், காராமணிப் பயறும், வெல்லமும் இருக்கிறது. களி கிண்டித்தருகிறேன். புறக்கடையில் பிஞ்சு விட்டிருக்கும் காய்களைப் பறித்து வாருங்கள். புளியும், மிளகாயும் உப்புமிட்டு கூட்டு செய்கிறேன், விசனப்பட வேண்டாம்’’ என்றாள்.

கொல்லைப்புறத்திலிருந்து ஏழு காய்கள் பறிந்து வந்தார் சேந்தனார். அம்மையார் களியும், தாளகமும் தயாரித்து சிவசன்யாசிக்கு விருந்திட்டார். “போகும் வழியில் சாப்பிட கொஞ்சம் கட்டிக்கொடுங்கள்” என்று கேட்டு வாங்கிக்கொண்டு போனார் சிவனார்.

மறுநாள் காலை தில்லை அம்பலவன் கோயில் வாசலிலிருந்து சேந்தனார் வீடு வரை களி சிந்தியிருப்பதைக் கண்டு, அர்ச்சகர்கள் விசாரித்து நடந்த அற்புத நிகழ்வை அறிந்து சேந்தனாரின் பக்தியைப் பாராட்டி வியந்தனர். அன்றிலிருந்து திருவாதிரையன்று களியும், ஏழுதான் கூட்டு எனப்படும் தாளகமும் நிவேதனமாகப் படைப்பது வழக்கமாகியிருக்கிறது.

நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவ அற்புதத்தை, அதன் தத்துவங்களை மஹாவிஷ்ணு லக்ஷ்மியிடம், நாரதரிடம், தன்னை தரிசிக்க வந்த முனிவர்களிடம், யோகிகளிடம் சொல்லக் கேட்டுக்கேட்டு அருகிலிருந்த ஆதிசேஷனுக்கு சிவதாண்டவத்தைத் திருவாதிரையன்று காண ஆசை வந்தது. தவமிருந்தார். தில்லைக்கு ஆதிரையன்று வரும்படி அருளினான் கூத்தன். மகிழ்ச்சியோடு பாதி பாம்பாகவும், பாதி மானிட வடிவுடனும் சிதம்பரத்திற்கு விரைந்த பதஞ்ஜலி (ஆதிசேஷன்) ஆதிரை நாளுக்காகக் காத்திருந்தார்.

அப்போது வியாக்ர பாதரின் நட்பு கிடைத்தது. திருமூலட்டானேசுவரரின் (தில்லையில் உள்ளது) பூஜைக்கு வண்டு தேன் உறிஞ்சாத மலர்கள் வேண்டுமென்று வியாக்ரபாதர் விரும்பினார். அதனால் பொழுது புலருமுன் மரங்களில் ஏறி பூப்பறிக்க, வழுக்காத புலிக்கைகளும், கால்களும், பூக்களை அடையாளம் கண்டுகொள்ள புலிக்கண்களும் வேண்டுமென்று சிவபெருமானை நோக்கித் தவமிருந்து பெற்றுக்கொண்டார்.

(வியாக்ர – புலி, பாதர் – பாதங்களை உடையவர்) இந்தப் புலிக்கும் அந்தப் பாம்புக்கும் ஆடிய தாண்டவமே திருவாதிரையின் ஆனந்த நர்த்தனம். அந்த ஆனந்த தாண்டவனின் அருள்பெற நாமும் இன்று நடராஜரை தரிசிப்போம்.

Previous article Benefits of Sphatika

Compare products

{"one"=>"Select 2 or 3 items to compare", "other"=>"{{ count }} of 3 items selected"}

Select first item to compare

Select second item to compare

Select third item to compare

Compare